NEWS

அன்பே சிவமாகி… கிராம தரிசனம் ஐயன்கேணி

மட்டக்களப்பு மாவட்டத்தின் வடக்கே சுமார் 15 கிலோ மீற்றருக்கு அப்பால் ஏறாவூர் பற்று பிரதேச செயலகத்தின்  39 கிராம சேவக பிரிவில் எழில் மிகு கிராமமாக ஐயங்கேணி கிராமம் திகழ்கின்றது. சுமார் 100 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலங்களுக்கு முன்னர், தோற்றம் பெற்ற இக் கிராமம் ஆரம்பத்தில் தளவாய் கிராம சேவகர்  பிரிவுடன் , இணைந்திருந்தது. காலப்போக்கில் குடும்பங்களின் பரம்பல்  அதிகரிக்க ஐயங்கேணி தமிழ் கிராம சேவகர் பிரிவாக மாற்றம் பெற்றது.  
 
ஐயங்கேணி எனும் பெயரானது , இங்கு கேணி காணப்படுவதாலும் ஐயர் பரம்பரை வாழ்ந்து வந்தனர் என்பதாலும், ஐயங்கேணி என அழைக்கப்படுகின்றது.வரலாற்று அடிப்படையில் நோக்குமிடத்து  ஐயங்கேணியில் கூலித்தொழில் புரிந்து  முன்னோக்கிச் செல்பவர்களே அதிகமாகவுள்ளனர்.தான் படிக்காவிட்டாலும் தமது பிள்ளைகளைப் படிக்கவைப்பதில்  பெற்றோர்கள்  ஆர்வம் காட்டுகின்றனர்.
 
இப்பேற்றப்பட்ட  அற்புதமான கிராமமான ஐயங்கேணி கிராமத்திற்கான தரிசனம்….
 
19102020 திங்கட்கிழமை, தென்கயிலை ஆதீனம் முதற் குருமகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தலைமையில், ஆன்மீகக் குழுவொன்று மட்டக்கள்ப்பு செங்கலடி, பாரதிபுரத்தில் அமைந்துள்ள ஐயன்கேணி கிராமத்தை நோக்கி பயணம் மேற்கொண்டு மக்களினதும் மாணவர்களினதும் அன்றாடம் எதிர்நோக்கும் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.
 
ஐயன்கேணி ஸ்ரீ ஆதி மாணிக்கப்பிள்ளையார் ஆலயத்தில் கிராம மக்களைச் சந்தித்த ஆன்மீகக் குழுவில் இளையபட்டம் தவத்திரு திருமூலர் தம்பிரான், ஆதீனத்தின் நிர்வாக உறுப்பினர் இளைப்பாறிய பாடசாலை அதிபர் திருமதி உமா ரதீஸ்வரன், திரு. ரதீஸ்வரன் ஆகியோர் இணைந்திருந்தனர்.

ஆலயமுன்றலில் பெரியோர்களும், அறநெறிப்பள்ளி ஆசிரியர்களும், மாணவர்களும் கூடி நின்று தமிழர் பண்பாட்டிற்கமைய மாலைகள் அணிவித்து அனைவரையும் மகிழ்வுடன் வரவேற்றனர்.
 
நிகழ்வின்போது, முதலில் மங்கல விளக்கேற்றப்பட்டது. தொடர்ந்து அறநெறிப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் ஒன்றிணைந்து அறநெறிப்பள்ளிக்கான கட்டட வசதி இல்லையென்றும் தாம் மரநிழலில் இருந்தே கல்வி கற்று வருவதாகவும் கூறி தமக்கு ஒரு கட்டடத்தை ஏற்பாடு செய்து தரும்படி தவத்திரு அகத்தியர் அடிகளாருக்கு அன்பான வேண்டுகோள் விடுத்திருந்தனர். அத்துடன், தமது அறநெறிப்பள்ளி மாணவர்களுக்கான போசாக்கு உணவையும் ஏற்பாடு செய்து தரும்படியும் கேட்டுக்கொண்டனர்.
 
மேற்படி வேண்டுகோளையடுத்து அறநெறிப்பள்ளிக்குரிய கட்டடம் ஒன்றை அமைத்துக்கொடுத்து Thenkailai Education Centre – TEC என்னும் நிறுவனத்தின் மூலம் , நவீனமுறையிலான நூலகம்,கணனி வகுப்பு,மற்றும் கலை தொடர்பான வகுப்புக்களும் ஏற்படுத்திக் கொடுப்பதாக தீர்மானிக்கப்பட்டது.
 
முதற்கட்டமாக அறிநெறிப்பள்ளி மாணவர்களுக்கு, போசாக்கு உணவு வழங்குவதாகவும் வறுமைக்கோட்டுக்கு உட்பட்ட , கற்பிணித் தாய்மார்களுக்கும்,பாலூட்டும் தாய்மார்களுக்கும் 3 மாதத்திற்கான போசாக்கு உணவு வழங்குவதாகவும் முடிவெடுக்கப்பட்டது.
 
மேலும் பாரதிபுரம் ஐயன்கேணி கிராமத்தில் மட்பாண்டம் தொழில் செய்யும் தொழிலாளர்களை அணுகி அவர்களின் தொழிலுக்கான ஊக்கத்தையும் உதவியையும் பெற்றுக்கொடுத்து மட்பாண்டத் தொழிலை மேம்படுத்த ஆதரவு கொடுப்பதாகவும் உறுதி கொள்ளப்பட்டது.