NEWS

இலங்கைத்துறையை நோக்கிய கிராம தரிசனம்

18102020 ஞாயிற்றுக்கிழமை தென்கயிலை ஆதீனம் முதற் குருமகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார் தலைமையில், ஆன்மீகக் குழுவொன்று திரிகோணமலை ஈச்சிலம்பற்று இலங்கைத்துறை என்னும் கிராமத்திற்கு நேரடிப் பயணம் மேற்கொண்டு மக்களினதும் மாணவர்களினதும் அன்றாடம் எதிர்நோக்கும் குறைகளையும், தேவைகளையும் கேட்டறிந்து கொண்டனர்.

மேற்படி குழுவில் இளையபட்டம் தவத்திரு திருமூலர் தம்பிரான், ஆதீனத்தின் நிர்வாக உறுப்பினர் இளைப்பாறிய பாடசாலை அதிபர் திருமதி உமா இரத்தினேஸ்வரன், திரு. இரத்தினேஸ்வரன் ஆகியோர் இணைந்திருந்தனர். துறவிகளுக்கு கொடுக்கப்படவேண்டிய சிறப்பு வரவேற்பாக மாலை அணிவித்து ஆரத்தி எடுத்து மக்கள் உபசரித்த விதம் அக்கிராமத்திற்கே உரிய பண்பை வெளிப்படுத்தியது.
  இச்சந்திப்பில் கிராமத்தின் பெரியவர்களும் , கல்விமான்களும், அறநெறி  மற்றும் பள்ளி மாணவர்களும் கலந்து கொண்டனர். சமகால சமூக இடைவெளியைக் கருத்திற்கொண்டு மட்டுப்படுத்தப்பட்ட மக்களே பங்கு கொண்டனர். முக்கிய விடயங்களாக அடிப்படை வருமானமற்ற குடும்பத்தினரின் சமகால வாழ்வாதார நிலைமைகள் குறித்தும், அறநெறிப் பள்ளிக்குரிய கட்டடம், மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வெகுதூரம் சென்று கல்வி கற்க முடியாத அவலநிலை ஆகியவற்றை மக்கள் உணர்வு பூர்வமாக வெளிப்படுத்தினார்கள்.

இதன் முதற்கட்டமாக மாணவர்களின் கல்வித்தரத்தை மேம்படுத்தும் வகையில் Thenkailai Education Centre – TEC நிறுவனம் கட்டடம் ஒன்றைப் பெற்று , அறநெறிப்பள்ளி , நவீனமுறையிலான நூலகம், கணனி வகுப்பு மற்றும் உயர்தர வகுப்புப் பிள்ளைகளுக்கான மேலதிக வகுப்புக்கள் என்பன உள்ளடங்கலான திட்டமொன்றை ஏற்படுத்தி கிராமமக்களுடன் இணைந்து செயற்படுவதாக முதற் குருமகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார் அவர்களால் நம்பிக்கை தெரிவிக்கப்பட்டது. இச் செயற்பாட்டுக்கு பிரதேச செயலகத்தின் ஒத்துழைப்புக்களும் வழி காட்டல்களும் பெற்றுக் கொள்ளப்படும்.

உயர்தர வகுப்புக்குரிய ஆசிரியர்களுக்கான கொடுப்பனவுகளை தென்கயிலை ஆதீனம் பொறப்பேற்றுக் கொள்வதாகவும் தீர்மானிக்கப்பட்டது. அத்துடன் அடிப்படை வசதியற்ற கற்பிணித் தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்கும் 3 மாதகால போசாக்கு உணவு வழங்கும் திட்டத்தையும் நடைமுறைப்படுத்த ஆதீனம் முடிவு செய்துள்ளது.

(மேற்படி கற்பிணித் தாய்மார்களுக்கும், பாலூட்டும் தாய்மார்களுக்குமான 3 மாதகால போசாக்கு உணவு வழங்கும் திட்டம் ஏனைய பாகங்களுக்கும் முறையே விரிவுபடுத்தப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.)
அத்துடன் கவனிப்பாரற்று கிடக்கும் பனம் விதைகளைப் பயிரிடும் ஊக்குவிப்புத் திட்டமொன்றும் நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டது