NEWS

தென்கயிலை சிவன் மலையில் சிவனிரவு

தென்கயிலை சிவன் மலையில் சிவனிரவு
இன்று ( 11-03-2021 ) வியாழக்கிழமை திருகோணமலை தென்கயிலைஆதீனத்தின் சிவன் மலையில் மகாசிவனிரவு நிகழ்வு ஆரம்பமானது. 108 லிங்கப் பெருமான்களுக்கும் வேள்வி நடைபெறத்தொடங்கியுள்ளன. வேள்வியைத் தொடர்ந்து அனைத்து லிங்கப் பெருமான்களுக்கும் நன்நீராட்டு இடம் பெற்றுள்ளன.

முதலில் மங்கள விளக்கு ஏற்றப்பட்டது. இலங்கை தேசியக்கல்வி நிறுவக விரிவுரையாளர் கலாநிதி பொன் ஜெயரூபன் அவர்கள், சைவப்புலவர் திருமதி சிவானந்தஜோதி ஞானப்பிரகாசம் அவர்கள், இசை ஆசிரியர் திருமதி பத்மலோஜினி குணராஜசிங்கம் அவர்கள்,சைவப்புலவர் திருமதி விஜயலக்சுமி அவர்கள்,ஆசிரியர் சிவத்திரு காண்டீபன் அவர்கள்,செந்தமிழாகம அருட்சுனைஞர் உயிரொளிச்சிவம் பிரதாப் ஐயா அவர்கள், மற்றும் செல்வஜோதி ஐயா ஆகியோர் மங்கள விளக்கை ஏற்றி வைத்தனர்.

கொடி ஏற்றும் நிகழ்வுகள் இடம் பெற்றது.

தொடர்ந்து காலை சிவன் மலையில் நந்திக்கொடி மற்றும் ஆதீனக்கொடி ஏற்றும் நிகழ்வுகள் ஆரம்பமபனது. இன்று உயிர்ச்சக்திகொடுக்கப்பட்ட வாயிலில் அமைக்கப்பெற்ற நான்கரை அடி உயரமுள்ள ஆதிசக்தி அபிராமி பெருமானுக்கு எண்ணைக் காப்பு இடுதல் நிகழ்வும் இடம் பெற்றது.

சிவன்மலைக்கு வருகை தந்துள்ள இலங்கை தேசியக்கல்வி நிறுவகத்தின் விரிவுரையாளர் கலாநிதி பொன் ஜெயரூபன் அவர்கள் நந்திக்கொடியையும், ஆதீனத்தின் முதற்குரு மகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார் ஆதீனக்கொடியையும் ஏற்றி வைத்தனர்.

காலையிலேயே சிவன் மலையை நோக்கி பல நூற்றுக்கணக்கான பத்தர்கள் பல பாகங்களிலும் இருந்து வருகை தரத் தொடங்கியுள்ளனர்.

இலங்கை நேரப்படி மாலை 07 00 மணிக்கு ஆரம்பமாகும் நேரஞ்சல் ஒளிபரப்பிற்கு ஆதரவு நல்கிய பிரான்ஸ் அப்பா சிவனே நிறுவனத்தாருக்கும் , கனடா கொலம்பியா குறூப் நிறுவனத்தாருக்கும் , கொழும்பு வத்சலா ரேட் சென்ரர் நிறுவனத்தாருக்கும் தென்கயிலை ஆதீனம் தனது வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.