NEWS

1200 போசாக்கு குறைந்த சிறுவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கும் திட்டம்

அவனருளாலே அவன்தாள் வணங்கி.

தென்கயிலை ஆதீனம் (திருகோணமலை) முதற் குருமகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார், இளையபட்டம் தவத்திரு திருமூலர் தம்பிரான்  ஆகியோர் தலைமையில், கடந்த 22 வருடங்களாக திருகோணமலை மாவட்டத்தில் சமூகவேலைத் திட்டங்களிலும், ஆன்மீக செயற்றிட்டங்களிலும் தென்கயிலை ஆதீனம் தன்னை ஈடுபடுத்தி வருகின்றது. அண்மைக் காலங்களாக  திருகோணமலை மாவட்டத்தைத் தாண்டி வடக்கு, கிழக்கு, மலையகம் என, ஆன்மீகம் ,சமூகம், கல்வி சார் வேலைத்திட்டங்களை விரிவாக்கம் செய்து வருகின்றது.   

தென்கயிலை ஆதீனம் மேலும் தனது கிளைகளை உருவாக்கி ஆன்மீகச் செயற்பாடுகளையும் அறநெறி சார் திட்டங்களையும் செயற்படுத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளும் இதே நேரத்தில்,சமூகம் சார்ந்தும் கல்வி சார்ந்தும் பின் தங்கிய நிலையிலுள்ள பிரதேசங்களில்  பல திட்டங்களை மேற்கொண்டு வருகின்றது.

இந்த வகையில் தென்கயிலை ஆதீனம் பல பிரதேச செயலகப் பிரிவின் செய லர்களிடமிருந்தும், பொது சுகாதார மருத்துவ உத்தியோகத்தர்களிடமிருந்தும் மேற் கொள்ளப்பட்ட வேண்டுகோளுக்கிணங்க ஆயிரத்து இருநூறு (1200) போசாக்கு குறைந்த சிறுவர்களுக்கு போசாக்கு சத்துணவு (நவபோசா) வழங்கும் திட்டத்தை  நடைமுறைப்படுத்த முன்வந்துள்ளது.

திருக்கோயில், கிரான், செங்கலடி, வாகரை, வெருகல் முகத்துவாரம், திருகோணமலை கன்னியா, பாட்டாளிபுரம் , பொலநறுவை ஆகிய பிரதேசத்திலுள்ள ஆயிரத்து இருநூறு (1200) சிறுவர்களுக்கு முதற்கட்டமாக மூன்று (3) மாதத்திற்கு மேற்படி நவபோச சத்துணவு  வழங்கப்படுகிறது.

போர்க்காலச் சூழ்நிலையினாலும், இயற்கை அனர்த்தத்தினாலும் மீளமுடியாத நிலையிலுள்ள, இன்றும் பொருளாதார ரீதியில் முன்னேற்றம் அடையாது துன்பத்தை அனுபவித்துக் கொண்டிருக்கும்  தமிழ்  சமுதாயத்தில் எம் போன்றவர்கள் முன்னின்று செயற்பட வேண்டிய நல்லதொரு தருணங்கள் நம் எல்லோருக்கும் சிவனருளால்  கிடைத்தது பெரும் பாக்கியமே.

இதுபோன்ற ஆத்மார்த்தமான செயற்றிட்டங்களை நிறைவேற்றுவதற்கு  நல்லுள்ளம் கொண்டோரின் பேராதரவுடனும் பங்களிப்புடனும் இத்திட்டத்தை நல்ல முறையில் செயற்படுத்தி இச்சிறுவர்களின் எதிர்காலத்திற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து கை கொடுப்போம். மேற்படி திட்டத்திற்கு இரண்டு மாதத்திற்கு தேவையான போசாக்கு உணவிற்குரிய நிதியினை சிவனருள் நிறுவனம் பொறுப்பேற்றிருப்பது சிவன் சித்தமாகும். அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் .

முதற்கட்டப் போசாக்கு உணவு கையளிப்பு

16-12-2020 புதன்கிழமை மட்டக்களப்பு வாகரைப் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கிராமங்களில் போசாக்கு குறைந்த சிறுவர்களுக்கு போசாக்கு உணவு வழங்கப்பட்டது. மீட்சி அறக்கட்டளை ஆதரவுடன் தென்கயிலை ஆதீனத்தால் வழங்கப்பட்ட 150 போசாக்கற்ற சிறுவர்களுக்கான போசாக்கு உணவு வாகரை, வாகரை மத்தி, கண்டலடி, பால்சேனை, அமந்தனாவெளி ஆகிய கிராமங்களில் மேற்படி திட்டம் நடைமுறைப்படுத் தப்பட்டது.

முதலாவதாக வாகரை பிரதேச செயலகத்தில், பிரதேச செயலர் திரு. சுப்பிரமணியம் கரன் அவர்களின் தலைமையில் போசாக்கு உணவு வழங்கும் திட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில், திருகோணமலை தென்கயிலை ஆதீனத்தின் முதற் குருமகாசந்நிதானம் தவத்திரு அகத்தியர் அடிகளார், இளையபட்டம் தவத்திரு. திருமூலர் தம்பிரான் ,தென்கியிலை ஆதீன நிர்வாக உறுப்பினர் இளைப்பாறிய பாடசாலை அதிபர் திருமதி உமா ரதீஷ்வரன், திரு.ரதீஷ்வரன் , செந்தமிழாகம அருட்சுனைஞர் மனோஜ் ஐயா ஆகியோர் கலந்து கொண்டனர். அத்துடன், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகஸ்தர் திரு அழகுராஜ், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் திரு.உமேஷ், சிறுவர் உளநல உத்தியோகஸ்தர் திருமதி.எஸ்.சுதாஜினி, வெளிநாட்டு அபிவிருத்தி உத்தியோகஸ்தர் திரு.சயன்ஒளி ஆகியோர் மேற்படி நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் .